Friday, October 26, 2012

Saturday, August 18, 2012

Sunday, July 3, 2011

கல்லைப் பிசைந்து .....


நான் கற்கும் காலத்தில் சில காலம் கொழும்பு சாஹிரா கல்லூரியிலும் கற்க நேர்ந்தது.
அப்போதெல்லாம் என்னுடன் கற்ற வெளியூர் மாணவர்கள் நீ எந்த ஊர் எனக் கேட்டால் நான் வாழைச்சேனை என பதில் சொன்னால் உங்களூரில் அதிகம் வாழை மரங்கள் இருக்குமா? என அடுத்த கேள்வியும் கேட்பார்கள். அதேபோன்று ஓட்டமாவடி என்றாலும் மாமரங்கள் இருக்குமா? என்றும் கேட்பார்கள் இந்த முப்பத்தி எட்டு வயதுவரை நான் எனக்குள் கேட்டுக்கொண்ட கேள்வி கல்குடா என்றால் அப்படிப் பெரிதாக கல் எங்கே இருக்கிறது?
கல்குடா எமதூரிலிருந்து ஒருசில மைல் தூரங்கள்தான் ஆனாலும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

புலிகளின் கொட்டம் அடங்கி எமதூரைச் சுற்றி அடைக்கப் பட்டிருந்த காவலரண்கள் தளர்ந்து நாங்களும் தமிழர் பிரதேசத்துக்குள் சென்று திரும்பி வரலாம் என்ற நிலை தோன்றியபோது நான் முதன்முதலில் சென்ற இடம் கல்குடா,பாசிக்குடா கடற் கரைகளுக்குத்தான்.

அதற்கு முக்கிய காரணம் சுமார் 13 வருடங்களாக கொழும்பில் கடை உணவுகளையே சாப்பிட்டு மரத்துப் போன நாக்குக்கு  fresh மீன் வாங்கி சமைத்து உண்ணவேண்டும்  என்ற ஆசைதான்.
எனது துறைமுக நண்பர்களில் ஒருவன் சொல்வான் கொழும்பில் சமைக்கின்ற மீன்கள் கடலில்  வாழ்ந்த காலங்களை விடவும் ''பிரிட்ஜில்'' வாழ்ந்த காலங்கள்தான் அதிகமென்று.

கடற்கரையில் கரை வலை இழுப்பவர்கள் இத்தன மணிக்கு வந்தால் மீன் தரலாம் தம்பி என்றார்கள். நானும் அந்த நேரம் வரை கமராவும் கையுமாக அந்தக் கடற்கரையெல்லாம் அலைந்தேன் அந்த சில நிமிடங்களில்தான் கல்குடா என்ற பெயர் பற்றிய புரிதல் எனக்குக் கிடைத்தது.

மாதுறு ஓயா ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் எழிலில் அங்கங்கே தெரியும் கற்களும், கற்களில் நான் கண்ட உருவங்கள் இதோ


























 





























இவைகளெல்லாம் எதேச்சையாய் வடிவம் பெற்றது  என்று நம்பலாமா?
அல்லது நீரோட்டத்தில் கரைக்கப் பட்டு இந்த வடிவம் பெற்றிருக்கலாம் என்றால் அனைத்துக் கற்களுமல்லவா அழகு பெற்றிருக்க வேண்டும் ஏன் இந்தக் கற்கள் கரைந்து நேர்த்தி பெறவில்லை?


 
















சுமார் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்குமுன் மீரவோடையின் நான்காம் வட்டாரத்தின் ஒரு பகுதி சட்டிபானக் குடா என்றும், சட்டிபானத் தெரு என்றும் அழைக்கப் பட்டது.
அந்த நாட்களில் அங்கிருந்த வீடுகள்தோறும் களிமண்ணும் ஆற்றுமண்ணும் குவியலாக இருக்கும்.
களிமண்ணை எடுத்து நீர்தெளித்து பொலித்தீன் அல்லது சாக்கினால் மூடிவைப்பார்கள் அது பொதும்பி பதப் பட்டதும் அளவாக ஆற்றுமண்ணைத் தூவி காலால் மிதித்து பதப் படுத்திக்கொண்டு குண்டு குண்டாக உருட்டி தட்டையான ஓடுகளில் வைத்து ஒருகை தட்டினைச் சுழற்ற மறுகை களிமண்ணில் நடனமிடும்
சில நிமிடங்களிலேயே அந்த களிமண் உருண்டைகள் சட்டிகளாகவும்,பானைகளாகவும்,கு
டங்களாகவும். உலமூடிகளாகவும் உருவம் பெறும். பின்னர் அதை வெயிலில் வைத்து உலர்த்தி அடுக்கி வைப்பார்கள்.
மழை வராத ஒருநாளில் அங்கே  தயாரிக்கப் பட்ட பலரது பாத்திரங்கள் ஒரே சூளையில் சுடப்படும்.
என்ன அதிசயம் அதுவரை களிமண் நிறத்தில் கருப்பாக இருந்த பாத்திரங்கள் சூளை பிரிக்கும் போது சுட்ட இறால்கள் போல சிவப்பாகத் தக தகக்கும்.

இப்போது இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?
களிமண்ணைக் குழைத்து பாத்திரங்கள் செய்வதுபோல் கல்லைக் குழைத்து உருவங்கள் வடித்த ஒரு சந்ததி முன்பொருகாலத்தில்  வாழ்ந்த்திருக்கலாமோ? என்று எனக்குள் எண்ணத் தோன்றியது. 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 
எஸ்.நளீம்           

Thursday, June 9, 2011

பொலிஸ் நாயும் ஐ .பி.குதிரையும்


       பஞ்சு பொம்மைகள்போல் மெது மெதுவென்று உருண்டோடித் திரியும் நாய்க் குட்டிகளைக் கண்டால் என் மனதும் அதன் பின்னால் உருண்டோடும். அது என் பால்ய பருவம்.

ஆனால் எனக்கும் பாட சாலைக்குமான தொடர்பை இது குறைத்துவிடும் என்று என் பெற்றோர் நம்பினர்.என் தந்தை ஒரு இஸ்லாமிய இயக்கத்தில் அமீராக இருந்ததாலும் அமீர் வீட்ட்டில் நாய்  வளர்க்கிறார்கள் என்று யாரும் சொல்லிவிடுவார்கள் என்ற பயமும் இருந்ததால் நாய் வளர்ப்பதற்கான தடை எங்கள் வீட்டில் பலமாக இருந்தது.

என்றாலும் இத்தனை இராணுவக் கெடுபிடிக்குள் எப்படியோ கொழும்பு நகருக்குள் குண்டுகள் வந்து சேர்ந்ததுபோல் .நானும் அன்றில் வீட்டுக்குத்தெரியாமல் வித விதமான நாய்க் குட்டிகளைக் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டுதான் இருந்தேன்.இதற்க்கு எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த மரவள்ளித் தோட்டம் எனக்கு வசதி தந்தது. யாருக்கும் தெரியாமல் கட்டி வைத்திருக்கும் நாய்க்குட்டி இரவிலே மழை பெய்து நனைந்து குளிரிலே கத்தும் போது எத்தனையோ தடவைகள் அந்த நாய்க் குட்டிகளுக்காய் நானும் படுக்கையிலே அழுதிருக்கிறேன். 

எனவே இந்த இரகசியத்தைத் தொடர்வதில் எனக்குப் பெரும் சவாலாக இருந்தது இரண்டு விடையங்கள்தான் .ஒன்று நான் உண்ணும் உணவில் மீதம் பிடித்து நாய்க்காக வேறு படுத்துவது ;இரண்டாவது மோப்ப நாய்கள்போல் என் பின்னாலேயே தொடரும் என் சகோதரிகள்.
பாடசாலை விட்டு வீட்டுக்கு  வந்து புத்தகங்களை வைத்துவிட்டு சீருடையை களைவதற்கு முன்பே என் செல்ல நாய்க் குட்டிகளைத் தேடி ஓடுவேன் ,அங்கே  ஏமாற்றம்தான் இருக்கும். இதனால் இன்றுவரை நாய் வளர்க்கும் என் ஆசை நிறைவேறாமலே போயிட்டு 

சரி அது அப்போ இபோதைக்கு வருவோம் 
கொழும்பு துறை முகத்துக்குள் அண்மைக்காலமாக அல்சேஷன்  முதல் கொண்டு பலவகையான மோப்ப நாய்கள் பாதுகாப்பு கடமைக்காக பயன் படுத்தப் படுகின்றன. இதில் பொலிஸ் நாய்களும் துறைமுகத்துக்குச் சொந்தமான நாய்களும் அடங்கும்.

கொழும்புத் துறைமுகத்தின் பிரதான வாயில் பாதுகாப்புக் கடமைகளுக்காக துறை முகப் பொலிசாருக்குச் சொந்தமான இரண்டு நாய்கள் தொடர்ச்சியாக கடமை செய்கின்றன 
சிறுவர் காட்டுன்னான ''ஜங்கிள் புக்கில்'' வரும் பகீரா போன்று   தோற்றம் கொண்ட கருப்பு நிறத்தில் ஒன்றும் அதன் ''நெகடிவ் ''போன்ற வெள்ளை நிறத்தில் ஒன்றும் இருக்கின்றன. இந்த வெள்ளை நிற நாயை பராமரிப்பது போலீஸ் ''கோன்ஸ்டப்ள்''  நண்பன் உபாலி. அவனிடமிருந்து அந்த நாய்கள் பற்றிய சில உண்மைகளை கேட்டு அறிந்து கொண்டேன். அவுஸ்த்ரேலியாவில் இருந்து வரவழைக்கப் பட்டதாக கூறினான்.

''அவுஸ்த்ரேலியாவின் மனிதர்கள்,குதிரைகள்  போல் நாய்களும் பெரிதாகத்தான் இருக்கின்றன'' என்றேன் சிரித்துக் கொண்டான். அவை எட்டு வயது பூர்த்தியானவை என்றும் இலங்கைக்கு வந்து  ஏழு வருடங்கள் ஆகிவிட்டதாகவும் அவனது பராமரிப்பில் ஆறு வருடங்களாக இருப்பதாகவும் அவை அவற்றுக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப் பட்டு வரும் உணவுகளை மாத்திரமே உட்கொள்வதாகவும் அவற்றுடன் ஆங்கிலத்தில் மாத்திரமே உரையாட முடியும் என்றும் கூறினான்

அவை கடமைக்கு வந்தவுடன் மிக உற்சாகமாக குதித்தோடி  அந்த வாயில் சூழலை மிக உன்னிப்பாக மோப்பம் பிடித்துவிட்டு மிகச்சாதுவாக வந்து படுத்துக் கொள்கின்றன.
சென்றவாரம் நாயுடன் கடமையில் இருந்த நண்பன் உபாலியிடம் இந்த நாய்கள் குண்டுகளைக் கண்டு பிடிப்பதாக கூறுகிறீர்கள் ஆனால் இங்கே கடமையில் இருக்கும் ''நேவி'' இடம் எத்தனை வகையான குண்டுகள் இருக்கின்றன.....?
என எனது சந்தேகத்தை தெரிவித்தேன். சிரித்துக் கொண்டே உபாலி அருகில் நின்ற நேவி ஒருவரின் துப்பாக்கி ரவை ஒன்றை பெற்று என்னிடம் தந்து நான் அந்தப் பக்கமாக நாயை அழைத்துச் செல்கிறேன் எங்காவது மறைத்து வையுங்கள் பார்க்கலாம் என்றான்.

நானும் சற்று ஒதுங்கலான இடத்தைப் பார்த்து அதைப் புதைத்துவிட்டேன். பின்னர் நாயை அழைத்து வந்த உபாலி ஆங்கிலத்திலே உத்தரவினைப் பிறப்பித்தான்
என்ன ஆச்சர்யம் மிகச்சரியாக மோப்பம் பிடித்து வந்த அது துப்பாக்கிரவை புதைக்கப் பட்ட இடத்தில் பிட்டத்தை வைத்து உட்கார்ந்து கொண்டது. பின்னர் அவ்விடத்தை விட்டும் அகல மறுத்தது. குரைத்துக் குரைத்துக் காண்பித்தது. அதனிடம் அன்பாக நடந்துகொண்ட உபாலி அதன் உச்சியையும் பிடரிப் பகுதியினையும் மசாஜ் செய்வதுபோல் தடவி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டே ''அவைகளுக்கு கட்டளை பிறப்பித்தால் மாத்திரமே குண்டுகளைக் கண்டு பிடிக்கின்றன'' என்றான்.

தொடர்ந்து பேச்ச்சுத் தொடர்ந்த நான் ''உங்கள் நாய்களுக்கும் பதவி உயர்வு இருப்பதாகவும் அவைகளைப் பராமரிக்கின்றவர்கள் சாதாரண பி.சி.யாக இருக்கின்ற போது நாய்கள் எஸ்.ஐ. யாக ஐ.பி. யாக பதவி உயர்வு பெற்று விடுவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன் என்ற போது அதனை மறுத்த அவன் மிருகங்களுக்கு என்ன பதவி உயர்வு கொடுப்பது..? சும்மா சுவாரஸ்யத்துக்காக சொல்கிறார்கள் அதில் உண்மை ஒன்றும் இல்லை ''என்றான்.

தொடர்ந்து பேசிய அவன் அந்த நாய்களைக்  கையாள்வதில் தனக்கு சவாலாக இருப்பது நம் நாட்டுக் கட்டாக்காலி நாய்கள்தான் அவைகளிடமிருந்து இவைகளைப் பாதுகாப்பதில் வேண்டாம் என்றாகி விடுகிறது என்றான்.

    கடந்த காலங்களில் கொழும்புத்துறைமுகத்தில் ஈ, டி, யாக கடமை வகித்த முஸ்லிமான ஒருவர்; நாய், பூனைகளை அண்டவிடாது கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்ததால்  சிலகாலம் நாய்களைக் காண முடிய வில்லை.
    பின்னர் அமைச்சர் மாறியபோது அவரும் சென்றுவிட்டதால் நாய்ப் பெருக்கம் வாயில்கள் தோறும் ஆறேழு குட்டிகளுடன் நாய்கள் குடிகொண்டு விட்டன.

    அண்மையில் நான் கண்ட ஒரு காட்ட்சி அல்லது சம்பவம் நாய்கள் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயத்தையே புரட்டிப் போட்டுவிட்டது .

    மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன் அந்த ''ரோஷி ''அழுகிய நிலையில் ஒரு எலியினை சுவைத்துக் கொண்டிருந்தது. அருவருப்பு மாளாமல் சீ.. கடி...என்றேன் அகன்றோடிய அது  மீண்டும் வளைத்துக் கொண்டு வருகையில் காக்கை ஒன்று மலம் கழித்ததும் அதையும் நாக்கினால் சுவைத்தது. இவை எதனையும் காணாத ''நேவி'' நண்பன் ஒருவன் பிஸ்கட்டுகளை உடைத்து கையில் வைத்துக் கொண்டு ''ரோஷி '' என்றான் தனது வாலைச் சுழற்றிய வண்ணம் விரைந்தோடிய ''ரோஷி'' பின் இரட்டைக் காலில் எழுந்து நின்று  அவனது கையில் இருந்த பிஸ்கட்டுகளை லபக்கென்று வாயில் எடுத்துக் கொண்டது அவனதுகையையும் நனைத்து.

    எதுவித அசூசையும் இல்லாது கையை கலிசனில் துடைத்துக் கொண்ட அவன் பிஸ்கட்டுகளை உடைத்து உண்ணத் தொடங்கினான்.

    நான் அன்றெல்லாம் எச்சில் உமிழ்ந்த வண்ணமிருந்தேன் .

    நன்றி; 
    எங்கள் தேசம்    
    01.14.2008             

    Sunday, August 8, 2010

    நோன்பு பிடித்த கள்வன்



      பிரித்தானிய குடி மக்களின் அன்றாட வழக்கங்களில் ஒன்றாம் நாள்தோறும் காலையில் அன்றாட கடமைகளுக்குச் செல்லுகின்ற போது வீதியில் கடமைகளில் நிற்கின்ற பொலிசாருக்கு காலை வணக்கம் சொல்வது.அவ்வாறு சொல்வதால் அன்றைய நாள் ஒரு சிறந்த நாளாக அமையும் என அவர்கள் நம்புகிறார்.

    ஆனால் நமது நாட்டில் போலீசாருக்கும் மக்களுக்குமான தொடர்பு..? 

    நான் அண்மையில் சந்தித்த இரு போலீஸ் உத்தியோகத்தர்கள் என்னை ஈர்த்தவர்கள். மரியாதைக் கூறியவர்கள்.
    நாம் எமது அலுவல்களை முடிக்கச் செல்கின்ற இடங்களில் கடமையில் இருப்பவர்கள் நல்ல மனிதர்களாக அமைவது நாம் பெறும் பேறாகும்.

    கடந்த மாதம் எட்டாவது நோன்பு தினத்தன்று 'ஷகர்' செய்துவிட்டு வந்து தூங்கிய சமயம்எனது விடுதியில் வைத்து திருட்டுப் போன பணம்,பொருள் சம்மந்தமாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்காகச சென்றிருந்தேன். என்னுடன் விடுதி முகாமையாளரும் வந்திருந்தார். முறைப்பாட்டினைப் பதிவு செய்த சாஜன் குணவர்த்தன மிகவும் நல்லவர்.மிகவும் அக்கறையுடன் நடந்து கொண்டார்.

    "உங்கள் விடுதியில் உள்ளவர்களில் யாரிலேனும் சந்தேகம் இருக்கிறதா?" என வினவினார் இல்லையென்றேன். உங்கள் அறைக்கு முன் அறையில் இருப்பவர் யார்?,என்ன செய்து கொண்டிருக்கிறார் நல்லவரா? அவரில் சந்தேகம் இல்லையா? என்றெல்லாம் வினவினார் நானும் இல்லை என்றுவிட்டு "அவர் மிகவும் நல்லவர். இன்று என்னிடம் வந்து எல்லாவற்றையும் களவு கொடுத்து விட்டு நிட்கிரீரே செலவுக்கு பணம் இருக்கிறதா? தரவா? என்று வினவிய ஒரே மனிதர் அவர்தான் என்றேன்."அப்படியானால் எனக்கு அவரில்தான் சந்தேகம். பிடித்து இரண்டு தட்டுத்தட்டி  விசாரிப்போமா?"  என்றார் 

    நான் வேண்டாம் என்று மறுத்ததோடு "எனது பொருள், பணத்தையும் பறி கொடுத்துவிட்டு அநியாயமாய் ஒரு நோன்பாளியை தண்டித்த பாவம்களையும் சுமக்கவேண்டுமா?" என்றேன்                         

    சிரித்துக்கொண்ட அந்த சாஜன் கூறினார்:

    வருடத்தில் வரும் இந்த நோன்பு மாதத்தில்தான் எண்கள் போலீஸ் நிலையத்தில் அதிகப் படியான குற்றச்செயல்கள் பதிவாகின்றன. நள்ளிரவு பனிரெண்டு மணிவரை நடமாடுகின்ற சந்தேகத்துக்கிடமானவர்களைப் பிடித்து விசாரித்தால் "தராவிஹ்" தொழுகைக்குப போய் வருவதாகக் கூறுகிறார்கள் அதிகாலை ஒரு மணிக்குப் பின் வருகின்றவர்களை விசாரித்தால் "ஷகர்'' செய்துவிட்டு வருவதாகவும் கூறுகிறார்கள் எங்களால் எதுவும் செய்ய முடிவதில்லை."  

    அண்மையில் மூன்று இளைஞர்கள் ஓர் அறையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டார்கள். விசாரித்தபோது தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்து "நாங்கள் முஸ்லீம்கள் நோன்பு பிடித்திருக்கிறோம் என்றார்கள்.  

    "இப்படியாக குற்றச் செயல்களில் ஈடு படுகின்ற வர்கள் சமயக் கடமைகளையும் தமக்கு ஆயுதமாக பயன் படுத்திக் கொள்கின்றார்கள்."எனப் புரிந்துணர்வுடன் கூறினார்.

    நான் ஏற்றுக்கொண்டேன் 

    பிற்பகல் 02.30 மணியைக் கடந்தும் உணவுக்குச் செல்லாதிருந்து அறையினைப் பார்வையிட்டு, முறைப்பாடு பதிவு செய்து, முறைப்பாட்டுப் பிரதி பெறவும் உதவிசெய்தார் எதுவித எதிர் பார்ப்புமின்றி!

    பின்னர்,

    துறைமுகத்துக்குள் கடமைக்கு வரும் தமிழ் போலீஸ் நண்பன் களவுபோன விடையத்தைக் கேள்வியுற்று என்னை ஆறுதல் படுத்தி எது நடந்தாலும் நன்மைக்காக இருக்கும் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி இஸ்லாமிய நட்சிந்தனையில் கேட்டதாக பின்வரும் கதையை என்னிடம் கூறினார்.
    அபூர்வமாக ஒரு கெட்டவனும், நல்லவரும் நண்பர்களாக இருந்தார்கள். இருவரும ஒரு வழியால் செல்கின்றபோது பள்ளிவாயலில் "பாங்கு" சொல்லப்பட, உடனே நல்லவர் பள்ளிக்குச் சென்று தொழுகையை முடித்துக் கொண்டு வருகிறார் மற்றவனோ அதனை அவமதித்து பள்ளி முன்றலில் நின்று "என்னடா பள்ளியும்  தொழுகையும்" என அவரை நையப்புடைத்து அங்கே சிறுநீர் கழித்துவிட்டு வருகிறான் . 

    இப்போது இருவரும் ஒன்றாகப் போகும் போது, தொழுதுவிட்டு வந்த நல்லவனுக்கு கல்லடிபட்டு காலிலே காயம் ,இரத்தம் சொட்டுகிறது. கெட்டவனோ அதிஸ்டவசமாக ஒரு திர்கம் பணத்தையும் வழியில் கிடந்து புறக்கிக் கொள்கிறான். 
    இப்போது அந்த நல்லவனைப் பார்த்து கெட்டவன் கேட்கிறான் 
    "பார்த்தாயா பள்ளி சென்று தொழுதுவிட்டு வருகின்ற உனக்கு காலிலே காயம், எனக்கோ கையிலே 
    பணம் 

    அப்போது அந்த வழியால் இஸ்லாமிய மார்க்கப் பற்று மிக்க ஒரு தீர்க்க தரிசி வருகிறார். உடனே அந்த தீர்க்கதரிசியிடம் அந்த இளைஞன் முறைப் படுகிறான். 

    அனைத்தையும் கேட்டுவிட்டு அந்த தீர்க்கதரிசி கூறுகிறார் 
    "நிச்சயமாக நீ செய்த நற்செயல் வீண்போகவில்லை. நீ இன்றுப் புரிந்த நட்செயலினால்தான் பெரியதொரு உயிர் ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறாய். மாறாக ,அவன் புரிந்த தீய செயலினால்தான் அவனுக்குக் கிடைக்க இருந்த இலச்சக் கணக்கான திர்கம்கள் ஒரே ஒரு திர்கமாகக் குறைக்கப் பட்டிருக்கிறது.

    எங்கள் தேசம் 
    2008.10.15           

    Friday, August 6, 2010

    தெமலச்சியா


    தமிழ் எமக்குத் தாய் மொழி.தந்தை மொழியும் அதுதான் அரேபியர்கள் இலங்கைக்கு வந்து தமிழ்ப  பெண்களை மணந்த காலத்தில் வேண்டுமானால் அரபு தந்தை மொழியாக இருந்திருக்கலாம்

    அதிலும் அரேபியாவில் இருந்து நேரடியாக இலந்கைக்கு௮ வந்த வர்களை விடவும் இந்தியாவுக்குள் வந்து தமிழுக்குள் உள்ளிழுக்கப்பட்டு இலங்கைக்கு வந்தவர்களாலேயே முஸ்லிம் இனப் பரம்பல் நிகழ்ந்த்திருக்கிறது என்பதற்கே அதிகமான சான்றுகள் கிடைக்கின்றன அதனால்தானோ என்னவோ தமிழ் பேசுவது என்பது நமக்கு இனிப்பாக இருக்கிறது.


    'கல்தோன்றி மண்தோன்றா....' என்று தொடங்கும் அடைமொழியோன்றும் தேவை இல்லை அதன் சிறப்பை உணர்த்த அம்மா என்ற சொல் ஒன்றே போதும் அதன் செம்மொழி என்ற சிறப்பை கொடுக்க.


    திசை தெரியாது நடுக்கடலிலே தத்தளித்துக் கொண்டிருந்த பலரது வாலோக்கைப் படகு கொழும்புத் துறை முகத்தில் தான் கரை தட்டி இருக்கிறது அந்தப் புகழ் அனைத்தும் அல்லாஹுக்குப் பின் அஸ்ரப் என்ற மாமனிதருக்கே சேர வேண்டும்.


    நிர்ப்பந்தம் காரணமாக சிங்களமொழியுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்ட காலம் தொடக்கம் எனக்குள் வளர்ந்து வந்ததொரு நம்பிக்கை - சிங்களம் தமிழை ஒட்டி வளர்ந்ததொரு கிளைமொழி என்பதாகும்.


    இதற்கு சிங்களத்துக்குள் பொதிந்து கிடக்கும் எத்தனையோ தமிழ்ச் சொற்களை ஆதாரமாக கூறமுடியும். முழுக்க முழுக்க சிங்களச் சொல்லாக நம்புகின்ற ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு அதன் பொருளை விளக்கும் தமிழ்ச் சொல்லை தேடினால் நிச்சயமாக ஏதாவதொரு சொல் அந்த சிங்கள சொல்லின் ஒலியை ஒத்ததாக  இருக்கும்.

    இந்த சந்தேகத்தை என்னுடன் நெருங்கிப் பழகும் சிங்கள நண்பரிடம் தெரிவித்தேன் அதனை அவர் மறுத்துரைத்தார். சிங்களப் பாட விதானத்த்தில் ஆதாரம் காட்டி சிங்களம், தமிழ், மலையாளம் போன்ற இன்னும் சில மொழிகளைக் கூறி இவை எல்லாம் பாளி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் சிங்களத்தை தமிழுக்கு நிகராகவும் பல சந்தர்ப்பங்களில் சிங்களத்தை உயர்த்தியும் பேசினான்.
    ஆனால் சிங்கள நடனம்,சினிமா,கலை,கலாச்சாரம் போன்று சிங்கள மொழியின் இலக்கணம் தமிழைப் பின்பற்றியே வழர்ந்துள்ளது என்பதனை விளக்கியதோடு சிங்கள நடனம் பரத நாட்டியத்துடன் உடன்படுவதையும் சிங்கள சினிமாவை வளர்த்தவர்கள் தமிழர்கள்தான் என்பதையும் சிங்கள சினிமாவில் கொடிகட்டிப் பறந்த ருக்மணி தேவி ஒரு தமிழ் பெண்தானே என்பதையும் சொன்னபோது அவனால் அவைகளை மறுக்க முடியவில்லை.மட்டுமன்றி இன்றைய சிங்கள இசைப் பிரபலங்கள் தமிழ் நாட்டில் இசை பயின்றவர்கள் என்பதனையும் அறுதியிட்டேன்.

    கொழும்புத் துறை முகத்துக்குள் உள்ள பெரும்பாலான தமிழ் எழுத்துக்களில் எழுத்துப் பிழைகளைக் காண முடியாது ஆனால் உள்ளே 'ஆர்ட் சேர்க்ல்' ( art circle ) என்ற அமைப்பொன்றுள்ளது அதன் பெயர்ப் பலகையில் குலை வட்டம் என்றுள்ளது. பல வருடங்கள் யாரும் திருத்துவாரின்றி.

     

    மற்றும் அமைச்சிலுள்ள பெயர் பலகையொன்றில் 19 தமிழ் பிழைகளைக் கண்டேன். வாயிலில் உள்ள சுங்கப் பணிப்பாளரின் அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகளைத   தவிர துறை முகத்துக்குள் தமிழ் நலமுடனேயே உள்ளது. எமது பிரதேசங்களில் இடம்பெறும் சிங்கள எழுத்துக் கொலைகள் அரிது என்பதால் தமிழ்ப் பிரதேசங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

    தெற்கிலிருந்து  துறைமுகத்துக்குள் புதிதாக தொழில் பெற்று வரும் இளைஞர்,யுவதிகள் ஆரம்பத்தில் தமிழ் பேசுவோரை விரோதமாகவே நோக்குகின்றனர். பின்னர் பழக்கமுற்று ஒருசில மாதங்களிலேயே நட்புறவு பாராட்டவும் தமிழை முணுமுணுக்கவும் செய்கின்றனர். இந்தவகையில் தமிழுக்கும் சிங்களத்துக்குமான ஒரு பாலமாக கொழும்பு துறை முகத்தைச் சொல்லலாம்.


    'கெண்டைனர் யாட்டில்' இருந்து வரும்  உஷ்ணம், சூரியன் உச்சம் கொள்ளும் வெயில், வாகனங்கள் வெளிவிடும் புகை,தூசு என்று கந்தக நெடி கமழ்ந்த துறை முகத்தை மாற்றி பசுமையை ஏற்படுத்துவதற்கான முயற்ச்சிகள் சில வருடங்களாக இடம்பெற்று பசுமை வளர்க்கப் பட்டு வருகிறது. plant nursery அமைக்கப் பட்டு அதனை அழகாக செய்கிறார்கள். இப்போது keep the port clean and green என்ற விளம்பரப் பலகைகளை பல இடங்களில் காணக் கூடியதாக உள்ளது.


    1978 ல் கிழக்கில் வீசிய புயலும் 1985 ல் மூர்க்கம் கொண்ட இனப் பிரச்சினையும் கிழக்கின் அழகையே அளித்து விட்டிருக்கிறது. மரம் செடிகள் வீழ்ந்தாலும் தறித்தழிக்கப் பட்டதாலும் துப்பாக்கிகளின் குண்டுகளின் சத்தத்தாலும் கிழக்கில் குடிகொண்டிருந்த பல நூறு வகைப் பறவைகள் குடி பெயர்ந்திட்டு. அந்த வகையில் கிழக்கில் காணாமல் போன பறவைகளில் ஒன்றை அண்மையில் துறைமுகத்துக்குள் கண்டேன்.


    சற்று வெளுப்பு நிறமான வலிமை குன்றிய வீட்டுக் குருவிபோல் தோற்றம் கொண்ட ஆனால் அதைவிட சற்று பெரிதான குருவியினை, தகரத்தில் ஆணியால் கிழிக்கும் போது எழும் ஒலிபோல் ஒலி எழுப்பும் அப்பறவை பெரும்பாலும் கூட்டமாகவே இரைதேட வரும். கிழக்கு மாகாணத்தில் அதற்கு 'களுகுலுப்பை' என்கிறார்கள்.

    அன்றும் என்னுடன் கடமையில் இருந்த என் சிங்கள நண்பனிடம் சிங்களத்தில் அதன் பெயரை அறியும் ஆவலுடன் கேட்டேன்.

    'தெமலச்சியா' என்றான். ஏன் இப்பரவைக்கு தமிழச்சி என்று அழைக்கிறார்கள் ? புரியாது மீண்டும் துருவினேன்
    தமிழ் பெண்கள் கதைக்கும் போது இந்தக் குருவி கத்துற மாதிரித்தானே இருக்கும் என்றான். நான் மரத்துப் போனேன். நம் செம் மொழிக்கு இந்தக்கதியா?  


    ''எங்கள் தேசம்'' 

    Thursday, January 14, 2010

    'போன்சாய்' மனிதர்கள்

    ஒரு சதுர அடிப் பரப்புக்குள் முப்பத்தைந்து, நாப்பது வருடங்கள் நிறைந்த ஆல விருட்சம்  வேர்விட்டு, விழுதுவிட்டு சிறியதொரு சட்டிக்குள் நிக்கிறது. பல வருடங்கள் நிரம்பிய ஒரு தோடை சிறியதொரு சாடிக்குள் பூத்து, காய்த்து,பழுத்து நிற்கிறது
    குறைந்தது ஐம்பது பழத்தையேனும் வெட்டிப் பிழியவேண்டும் ஒரு கிளாஸ் பானம் தயாரிக்க. ஆனால் அது உண்பதட்கல்ல அழகுக்கு மாத்திரமே என்கிறார்கள் போன்சாய் தாவரவியலாளர்கள்.

    கொழும்பு கலாபவனத்தில் பலவகையான கண்காட்ச்சிகள் அவ்வப்போது இடம்பெறுகின்றன  அதில்ஓவியம், புகைப்படம்,சிற்பம் மட்டுமன்றி போன்சாய் தாவரவியல் கண்காட்சியும்இடம்பெறுகின்றன.பெருபாலும் அனைத்துக்குமே  பார்பதற்கான அனுமதி  இலவசமாகத்தான் இருக்கிறது.சென்ற ஆண்டு இறுதிப் பகுதியளவில் இடம் பெற்ற ஒருபோன்சாய்தவரவியல் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன்.ஜப்பானிய போன்சாய் அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அந்த கண்காட்சி பலரையும் வியக்க வைத்தது.
     
    நட்டு ஒருவருடத்தில் தென்னை காய்க்கும், ஆறு மாதங்களில் பலா மரம் காய்க்கும், பழுக்கும்; நாற்பதே நாட்களில் முருங்கை பூக்கும், காய்க்கும்; ஒருசில வாரம்களிலேயே சோளம் கதிர்விடும் ,அவரை காய்க்கும் இவ்வாறு அடுக்கிக்கொண்டே போவார் எழுத்தாளர்எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்கள். இவை எல்லாவற்றையும் அவரது தோட்டத்தில் நிகழ்த்தி காட்டவும் செய்கிறார் ஒரு மேஜிக் காரன்போல் .இலங்கையில் உள்ள விவசாய போதனா பீடங்கள் முதற்கொண்டு இந்தியாவுக்கும் சென்றுஅங்கிருந்து கொண்டுவரும் விதை இனம்களை விளைவித்து இந்த வித்தையைஇயற்கையாகவே  நிகழ்த்திக் காட்டுகிறார்.இந்த ஆண்டின் தொடக்கப்பகுதியில் கொழும்புக்கு வந்திருந்த எஸ்.எல்.எம்.எனது அறையில்  என்னையும்  சந்தித்தார்  தனது பைக்குள்ளிருந்து வெளியே எடுத்த ஒருபேனரை விரித்து இது ஆறுமாதத்தில் காய்க்கும் பலா என்றார். அவரது சிறுவயதுபேத்தியை ப்லாவுக்குப்பக்கத்தில் நிறுத்தி படம் பிடித்திருந்தார். அவரது பேத்தியின் உயரத்தைவிட  சற்றே உயரம் கூடிய அந்தப்பலா பேத்தியின் இடுப்புயரத்துக்கு மூன்று காய்களை காய்த்து நிலத்திலே பரத்தியிருந்தது பார்க்க அபூர்வமாக  இருந்தது. தனது பைக்குள் மீண்டும் கையினைவிட்ட எஸ்.எல்.எம்.இந்தப்பலாப்பலத்தில் உனக்கும் ஒரு சுளை கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிட்டுப்பார் என என்னிடம்  நீட்டினார். வாங்கி கடதாசியை பிரித்துப் பார்த்தபோது மாம்பழத்தை அறுத்ததும் கொட்டையோடு ஒட்டித் தெரியும் நிறம் போன்று சிவப்பாகவும் தேர்ச்சியற்றவர்கள் செய்த கொளுக்கட்டை போன்று குண்டாகவும் சுவர் கனதியாகவும் இருந்தது. கிழித்து வாயில் வைத்தேன் வெல்லமாக இனித்தது. அறைமுழுவதும் மணம்.

    அன்றே எஸ்.எல்.எம்.அவர்களுடன் எங்கள்தேசம் காரியாலயத்துக்கு சென்றிருந்தபோது சகோ,அஸாம் அவர்களிடமும் பலாவுடன் பேத்தி இருக்கும் பேனரை காண்பித்து  பேசிக்கொண்டிருந்தார். அந்த உரையாடலின்போது அஸாம் அவர்கள் போன்சாய் தாவரங்கள் பற்றி என்ன நினைகிறீர்கள் எனக் கேட்டதற்கு எஸ்.எல்.எம். அளித்த பதில் முக்கியமானது .மனிதனின் மனம் குறுகிப்போனதன் வெளிப்பாடு அது என்றார்.மனிதனின்
    வக்கிரபுத்தி.மரங்களின் வாழ்வியலை நிர்ணயிக்கும் உரிமையை மனிதர்களுக்கு யார்தந்தது? என்றும் கேள்வி எழுப்பினார்
     
    வாஸ்தவம்தான்!
    குறைந்தகாலத்தில் கூடிய விளைச்சலைப் பெறுவதற்காக சிபாரிசு செய்யப்பட்ட நெல், தானிய வகைகள்,காய்கறி வகைகளை உற்பத்தி செய் கின்ற இன்றிலேயே உலகம் பாரிய உணவுத்தட்டுப்பாட்டை எதிர் கொள்கிறதென்றால் எதற்கு போன்சாய் மரங்கள்? உலக உணவுத்தட்டுப்பாட்டை  உலக நாடுகள் எப்படி நிவர்திக்கப்போகின்றன? போன்சாய் மரங்களை கைவிட்டு உலக மனிதர்களையெல்லாம்  போன்சாய்மனிதர்களாகசிறுக்கவைதால் உலக உணவுப் பிரச்சினை தீருமோ,என்னவோ?
     
    ( எங்கள் தேசம்  -.2008.08 .15   )