Sunday, July 3, 2011

கல்லைப் பிசைந்து .....


நான் கற்கும் காலத்தில் சில காலம் கொழும்பு சாஹிரா கல்லூரியிலும் கற்க நேர்ந்தது.
அப்போதெல்லாம் என்னுடன் கற்ற வெளியூர் மாணவர்கள் நீ எந்த ஊர் எனக் கேட்டால் நான் வாழைச்சேனை என பதில் சொன்னால் உங்களூரில் அதிகம் வாழை மரங்கள் இருக்குமா? என அடுத்த கேள்வியும் கேட்பார்கள். அதேபோன்று ஓட்டமாவடி என்றாலும் மாமரங்கள் இருக்குமா? என்றும் கேட்பார்கள் இந்த முப்பத்தி எட்டு வயதுவரை நான் எனக்குள் கேட்டுக்கொண்ட கேள்வி கல்குடா என்றால் அப்படிப் பெரிதாக கல் எங்கே இருக்கிறது?
கல்குடா எமதூரிலிருந்து ஒருசில மைல் தூரங்கள்தான் ஆனாலும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

புலிகளின் கொட்டம் அடங்கி எமதூரைச் சுற்றி அடைக்கப் பட்டிருந்த காவலரண்கள் தளர்ந்து நாங்களும் தமிழர் பிரதேசத்துக்குள் சென்று திரும்பி வரலாம் என்ற நிலை தோன்றியபோது நான் முதன்முதலில் சென்ற இடம் கல்குடா,பாசிக்குடா கடற் கரைகளுக்குத்தான்.

அதற்கு முக்கிய காரணம் சுமார் 13 வருடங்களாக கொழும்பில் கடை உணவுகளையே சாப்பிட்டு மரத்துப் போன நாக்குக்கு  fresh மீன் வாங்கி சமைத்து உண்ணவேண்டும்  என்ற ஆசைதான்.
எனது துறைமுக நண்பர்களில் ஒருவன் சொல்வான் கொழும்பில் சமைக்கின்ற மீன்கள் கடலில்  வாழ்ந்த காலங்களை விடவும் ''பிரிட்ஜில்'' வாழ்ந்த காலங்கள்தான் அதிகமென்று.

கடற்கரையில் கரை வலை இழுப்பவர்கள் இத்தன மணிக்கு வந்தால் மீன் தரலாம் தம்பி என்றார்கள். நானும் அந்த நேரம் வரை கமராவும் கையுமாக அந்தக் கடற்கரையெல்லாம் அலைந்தேன் அந்த சில நிமிடங்களில்தான் கல்குடா என்ற பெயர் பற்றிய புரிதல் எனக்குக் கிடைத்தது.

மாதுறு ஓயா ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தின் எழிலில் அங்கங்கே தெரியும் கற்களும், கற்களில் நான் கண்ட உருவங்கள் இதோ


























 





























இவைகளெல்லாம் எதேச்சையாய் வடிவம் பெற்றது  என்று நம்பலாமா?
அல்லது நீரோட்டத்தில் கரைக்கப் பட்டு இந்த வடிவம் பெற்றிருக்கலாம் என்றால் அனைத்துக் கற்களுமல்லவா அழகு பெற்றிருக்க வேண்டும் ஏன் இந்தக் கற்கள் கரைந்து நேர்த்தி பெறவில்லை?


 
















சுமார் இருபத்தைந்து முப்பது வருடங்களுக்குமுன் மீரவோடையின் நான்காம் வட்டாரத்தின் ஒரு பகுதி சட்டிபானக் குடா என்றும், சட்டிபானத் தெரு என்றும் அழைக்கப் பட்டது.
அந்த நாட்களில் அங்கிருந்த வீடுகள்தோறும் களிமண்ணும் ஆற்றுமண்ணும் குவியலாக இருக்கும்.
களிமண்ணை எடுத்து நீர்தெளித்து பொலித்தீன் அல்லது சாக்கினால் மூடிவைப்பார்கள் அது பொதும்பி பதப் பட்டதும் அளவாக ஆற்றுமண்ணைத் தூவி காலால் மிதித்து பதப் படுத்திக்கொண்டு குண்டு குண்டாக உருட்டி தட்டையான ஓடுகளில் வைத்து ஒருகை தட்டினைச் சுழற்ற மறுகை களிமண்ணில் நடனமிடும்
சில நிமிடங்களிலேயே அந்த களிமண் உருண்டைகள் சட்டிகளாகவும்,பானைகளாகவும்,கு
டங்களாகவும். உலமூடிகளாகவும் உருவம் பெறும். பின்னர் அதை வெயிலில் வைத்து உலர்த்தி அடுக்கி வைப்பார்கள்.
மழை வராத ஒருநாளில் அங்கே  தயாரிக்கப் பட்ட பலரது பாத்திரங்கள் ஒரே சூளையில் சுடப்படும்.
என்ன அதிசயம் அதுவரை களிமண் நிறத்தில் கருப்பாக இருந்த பாத்திரங்கள் சூளை பிரிக்கும் போது சுட்ட இறால்கள் போல சிவப்பாகத் தக தகக்கும்.

இப்போது இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா?
களிமண்ணைக் குழைத்து பாத்திரங்கள் செய்வதுபோல் கல்லைக் குழைத்து உருவங்கள் வடித்த ஒரு சந்ததி முன்பொருகாலத்தில்  வாழ்ந்த்திருக்கலாமோ? என்று எனக்குள் எண்ணத் தோன்றியது. 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 
எஸ்.நளீம்