Thursday, June 9, 2011

பொலிஸ் நாயும் ஐ .பி.குதிரையும்


       பஞ்சு பொம்மைகள்போல் மெது மெதுவென்று உருண்டோடித் திரியும் நாய்க் குட்டிகளைக் கண்டால் என் மனதும் அதன் பின்னால் உருண்டோடும். அது என் பால்ய பருவம்.

ஆனால் எனக்கும் பாட சாலைக்குமான தொடர்பை இது குறைத்துவிடும் என்று என் பெற்றோர் நம்பினர்.என் தந்தை ஒரு இஸ்லாமிய இயக்கத்தில் அமீராக இருந்ததாலும் அமீர் வீட்ட்டில் நாய்  வளர்க்கிறார்கள் என்று யாரும் சொல்லிவிடுவார்கள் என்ற பயமும் இருந்ததால் நாய் வளர்ப்பதற்கான தடை எங்கள் வீட்டில் பலமாக இருந்தது.

என்றாலும் இத்தனை இராணுவக் கெடுபிடிக்குள் எப்படியோ கொழும்பு நகருக்குள் குண்டுகள் வந்து சேர்ந்ததுபோல் .நானும் அன்றில் வீட்டுக்குத்தெரியாமல் வித விதமான நாய்க் குட்டிகளைக் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டுதான் இருந்தேன்.இதற்க்கு எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த மரவள்ளித் தோட்டம் எனக்கு வசதி தந்தது. யாருக்கும் தெரியாமல் கட்டி வைத்திருக்கும் நாய்க்குட்டி இரவிலே மழை பெய்து நனைந்து குளிரிலே கத்தும் போது எத்தனையோ தடவைகள் அந்த நாய்க் குட்டிகளுக்காய் நானும் படுக்கையிலே அழுதிருக்கிறேன். 

எனவே இந்த இரகசியத்தைத் தொடர்வதில் எனக்குப் பெரும் சவாலாக இருந்தது இரண்டு விடையங்கள்தான் .ஒன்று நான் உண்ணும் உணவில் மீதம் பிடித்து நாய்க்காக வேறு படுத்துவது ;இரண்டாவது மோப்ப நாய்கள்போல் என் பின்னாலேயே தொடரும் என் சகோதரிகள்.
பாடசாலை விட்டு வீட்டுக்கு  வந்து புத்தகங்களை வைத்துவிட்டு சீருடையை களைவதற்கு முன்பே என் செல்ல நாய்க் குட்டிகளைத் தேடி ஓடுவேன் ,அங்கே  ஏமாற்றம்தான் இருக்கும். இதனால் இன்றுவரை நாய் வளர்க்கும் என் ஆசை நிறைவேறாமலே போயிட்டு 

சரி அது அப்போ இபோதைக்கு வருவோம் 
கொழும்பு துறை முகத்துக்குள் அண்மைக்காலமாக அல்சேஷன்  முதல் கொண்டு பலவகையான மோப்ப நாய்கள் பாதுகாப்பு கடமைக்காக பயன் படுத்தப் படுகின்றன. இதில் பொலிஸ் நாய்களும் துறைமுகத்துக்குச் சொந்தமான நாய்களும் அடங்கும்.

கொழும்புத் துறைமுகத்தின் பிரதான வாயில் பாதுகாப்புக் கடமைகளுக்காக துறை முகப் பொலிசாருக்குச் சொந்தமான இரண்டு நாய்கள் தொடர்ச்சியாக கடமை செய்கின்றன 
சிறுவர் காட்டுன்னான ''ஜங்கிள் புக்கில்'' வரும் பகீரா போன்று   தோற்றம் கொண்ட கருப்பு நிறத்தில் ஒன்றும் அதன் ''நெகடிவ் ''போன்ற வெள்ளை நிறத்தில் ஒன்றும் இருக்கின்றன. இந்த வெள்ளை நிற நாயை பராமரிப்பது போலீஸ் ''கோன்ஸ்டப்ள்''  நண்பன் உபாலி. அவனிடமிருந்து அந்த நாய்கள் பற்றிய சில உண்மைகளை கேட்டு அறிந்து கொண்டேன். அவுஸ்த்ரேலியாவில் இருந்து வரவழைக்கப் பட்டதாக கூறினான்.

''அவுஸ்த்ரேலியாவின் மனிதர்கள்,குதிரைகள்  போல் நாய்களும் பெரிதாகத்தான் இருக்கின்றன'' என்றேன் சிரித்துக் கொண்டான். அவை எட்டு வயது பூர்த்தியானவை என்றும் இலங்கைக்கு வந்து  ஏழு வருடங்கள் ஆகிவிட்டதாகவும் அவனது பராமரிப்பில் ஆறு வருடங்களாக இருப்பதாகவும் அவை அவற்றுக்கென்று பிரத்தியேகமாக தயாரிக்கப் பட்டு வரும் உணவுகளை மாத்திரமே உட்கொள்வதாகவும் அவற்றுடன் ஆங்கிலத்தில் மாத்திரமே உரையாட முடியும் என்றும் கூறினான்

அவை கடமைக்கு வந்தவுடன் மிக உற்சாகமாக குதித்தோடி  அந்த வாயில் சூழலை மிக உன்னிப்பாக மோப்பம் பிடித்துவிட்டு மிகச்சாதுவாக வந்து படுத்துக் கொள்கின்றன.
சென்றவாரம் நாயுடன் கடமையில் இருந்த நண்பன் உபாலியிடம் இந்த நாய்கள் குண்டுகளைக் கண்டு பிடிப்பதாக கூறுகிறீர்கள் ஆனால் இங்கே கடமையில் இருக்கும் ''நேவி'' இடம் எத்தனை வகையான குண்டுகள் இருக்கின்றன.....?
என எனது சந்தேகத்தை தெரிவித்தேன். சிரித்துக் கொண்டே உபாலி அருகில் நின்ற நேவி ஒருவரின் துப்பாக்கி ரவை ஒன்றை பெற்று என்னிடம் தந்து நான் அந்தப் பக்கமாக நாயை அழைத்துச் செல்கிறேன் எங்காவது மறைத்து வையுங்கள் பார்க்கலாம் என்றான்.

நானும் சற்று ஒதுங்கலான இடத்தைப் பார்த்து அதைப் புதைத்துவிட்டேன். பின்னர் நாயை அழைத்து வந்த உபாலி ஆங்கிலத்திலே உத்தரவினைப் பிறப்பித்தான்
என்ன ஆச்சர்யம் மிகச்சரியாக மோப்பம் பிடித்து வந்த அது துப்பாக்கிரவை புதைக்கப் பட்ட இடத்தில் பிட்டத்தை வைத்து உட்கார்ந்து கொண்டது. பின்னர் அவ்விடத்தை விட்டும் அகல மறுத்தது. குரைத்துக் குரைத்துக் காண்பித்தது. அதனிடம் அன்பாக நடந்துகொண்ட உபாலி அதன் உச்சியையும் பிடரிப் பகுதியினையும் மசாஜ் செய்வதுபோல் தடவி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டே ''அவைகளுக்கு கட்டளை பிறப்பித்தால் மாத்திரமே குண்டுகளைக் கண்டு பிடிக்கின்றன'' என்றான்.

தொடர்ந்து பேச்ச்சுத் தொடர்ந்த நான் ''உங்கள் நாய்களுக்கும் பதவி உயர்வு இருப்பதாகவும் அவைகளைப் பராமரிக்கின்றவர்கள் சாதாரண பி.சி.யாக இருக்கின்ற போது நாய்கள் எஸ்.ஐ. யாக ஐ.பி. யாக பதவி உயர்வு பெற்று விடுவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன் என்ற போது அதனை மறுத்த அவன் மிருகங்களுக்கு என்ன பதவி உயர்வு கொடுப்பது..? சும்மா சுவாரஸ்யத்துக்காக சொல்கிறார்கள் அதில் உண்மை ஒன்றும் இல்லை ''என்றான்.

தொடர்ந்து பேசிய அவன் அந்த நாய்களைக்  கையாள்வதில் தனக்கு சவாலாக இருப்பது நம் நாட்டுக் கட்டாக்காலி நாய்கள்தான் அவைகளிடமிருந்து இவைகளைப் பாதுகாப்பதில் வேண்டாம் என்றாகி விடுகிறது என்றான்.

    கடந்த காலங்களில் கொழும்புத்துறைமுகத்தில் ஈ, டி, யாக கடமை வகித்த முஸ்லிமான ஒருவர்; நாய், பூனைகளை அண்டவிடாது கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்ததால்  சிலகாலம் நாய்களைக் காண முடிய வில்லை.
    பின்னர் அமைச்சர் மாறியபோது அவரும் சென்றுவிட்டதால் நாய்ப் பெருக்கம் வாயில்கள் தோறும் ஆறேழு குட்டிகளுடன் நாய்கள் குடிகொண்டு விட்டன.

    அண்மையில் நான் கண்ட ஒரு காட்ட்சி அல்லது சம்பவம் நாய்கள் குறித்து எனக்கிருந்த அபிப்பிராயத்தையே புரட்டிப் போட்டுவிட்டது .

    மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன் அந்த ''ரோஷி ''அழுகிய நிலையில் ஒரு எலியினை சுவைத்துக் கொண்டிருந்தது. அருவருப்பு மாளாமல் சீ.. கடி...என்றேன் அகன்றோடிய அது  மீண்டும் வளைத்துக் கொண்டு வருகையில் காக்கை ஒன்று மலம் கழித்ததும் அதையும் நாக்கினால் சுவைத்தது. இவை எதனையும் காணாத ''நேவி'' நண்பன் ஒருவன் பிஸ்கட்டுகளை உடைத்து கையில் வைத்துக் கொண்டு ''ரோஷி '' என்றான் தனது வாலைச் சுழற்றிய வண்ணம் விரைந்தோடிய ''ரோஷி'' பின் இரட்டைக் காலில் எழுந்து நின்று  அவனது கையில் இருந்த பிஸ்கட்டுகளை லபக்கென்று வாயில் எடுத்துக் கொண்டது அவனதுகையையும் நனைத்து.

    எதுவித அசூசையும் இல்லாது கையை கலிசனில் துடைத்துக் கொண்ட அவன் பிஸ்கட்டுகளை உடைத்து உண்ணத் தொடங்கினான்.

    நான் அன்றெல்லாம் எச்சில் உமிழ்ந்த வண்ணமிருந்தேன் .

    நன்றி; 
    எங்கள் தேசம்    
    01.14.2008             

    No comments:

    Post a Comment